Friday, September 9, 2011

அறிமுகம்

இசை பொதுவெனினும் அதை நம் வாழ்க்கையின் தனிப்பட்ட நொடிகளுக்குள் பத்திரப்படுத்தும் பொழுது அதில் கிடைக்கும் உணர்வுகள்  அலாதியானது. அவரவர்க்கு உரியது. கால வெளியில் சுற்றித்திரிய உதவும் கருவியாகவும் ஞாபக மரங்களின் அனுபவ நிழல்களில் இளைப்பாறவும் இசையின் விழுதுகள் நம்மை சுற்றிப்படரும் பொழுது சாத்தியமாகிறது.

மதுரையில் மலர்ந்த பெரும்பாலோர் தங்களை அறியாமலே காதுகளை பாடல்களுக்கு திறந்து வைத்தபடியே வளர்ந்தவர்கள். அம்மனுக்கு கூழ் ஊற்றுவதில் துவங்கி ஆளை அடக்கம் செய்வது வரை அதிகாலை துவங்கி அர்த்த ஜாமம் வரை நகரில் ("பெரிய கிராமத்தில்")  எதற்கோ எவர்க்கோ ஏதோ ஒரு பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். வசதியை பொறுத்து பச்சை நிற குழாய் ஒலிப்பெருக்கியோ கருப்பு நிற "பாக்ஸ் ஸ்பீக்கர்"ஒ...

இன்றைய அர்த்தமின்மை நேற்றைய அர்த்தத்தை இன்னும் ஆழமாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்றைய சத்தமிக்க அர்த்தமற்ற பாடல்கள் அன்றைய பாடல்களின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட உதவுகிறது.

நம்மில் சிலருக்கு மட்டுமே சிறப்பான உணவை சமைக்க தெரியும். ஆனால் நிறைய பேருக்கு சிறப்பான உணவை ரசித்து உண்ணத்தெரியும். அதுபோல, சிறப்பான பாடலை தயாரிக்க ராகம், தாளம் போன்ற நுட்பமான ஞானம் வேண்டியிருப்பினும் அப்பாடல்களை ரசித்து உண்ண அதை உள்வாங்கி அனுபவிக்கும் உணர்வு போதும். இப்பகுதியும் அத்தகைய உணர்வின் அடிப்படையிலானதே...

இப்பகுதியில் பகிர்ந்து கொள்ளப்படும் பாடல்கள் மூலம் நீங்கள் தங்கிய ஏதோ ஒரு காலத்தை நீங்களே நினைவில் மீட்டெடுக்க முடியுமானால் அதுவே "பாடல் கேட்ட கதை"யின் கரு.

1 comment:

  1. //இன்றைய அர்த்தமின்மை நேற்றைய அர்த்தத்தை இன்னும் ஆழமாக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இன்றைய சத்தமிக்க அர்த்தமற்ற பாடல்கள் அன்றைய பாடல்களின் மகத்துவத்தை மேலும் மெருகூட்ட உதவுகிறது.//

    Superb...!

    ReplyDelete