Wednesday, November 30, 2011

6. மிதிவண்டியும் மீளா நினைவும்... பகுதி 2

நான் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்...மதுரை நகருக்குள் அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்ட "சைக்கிள் குழு" எங்கள் வீட்டின் பின்புறம் பெருமாள் கோவில் தெருவில் முகாமிட்டிருந்தது. நம்மூர் மக்களுக்கு புரளி கிளப்புவதில் கிடைக்கும் திருப்தி பெரிது போலும். அவர்கள் இமயமலையில் சைக்கிள் விட்டவர்கள் என்றும் ராஜஸ்தான்காரர்கள் அங்கிருந்து கண்ணை கட்டி கொண்டு சைக்கிளில் வந்திருக்கிறார்கள் என்றும் இஷ்டத்திற்கு கதை கட்ட, தினமும் மாலை தெருவில் கூட்டம் அம்மும். அக்குழுவின் hero சுமார் 3 வாரங்கள் சைக்கிள் மீதே இருப்பார். தினமும் மாலை வித்தைகள் நடக்கும். தெருவின் இருமருங்கிலும் கட்டப்பட்ட கம்பங்களில் ஒளிரும் tube lights, நடுவே மேடை, அதை சுற்றி சுற்றி வரும் cycle hero, தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் பாடல்கள், "காஜிமார் பாய் பத்து, பெருமாள் கோவில் பட்டர் பத்து" என்று இடையிடையே ஒலிக்கும் "உபயம்" பற்றிய அறிவிப்புகள் என்று அந்த வாரங்களின் காட்சி கனவு போல விரிகிறது...

tea stall காரர் டிபன் தருகிறார் ஆர்ய பவன் உணவு தருகிறது என்று தினம் ஒரு செய்தியுடன் அன்றைய மாலை ஆரம்பமாகும். பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மொட்டை மாடிக்கு சென்று "குழு" என்ன செய்து கொண்டிருக்கிறது என்று பார்ப்பதும் அன்றைய வித்தைகள் என்னவென்று கேட்பதும் போக பாடல்கள் காதில் வந்து விழுந்தபடியே இருக்கும். இந்த நாட்களில் மட்டுமே கேட்டு பிறகு எந்த "பொது இடத்திலும்" கேட்கவே வாய்ப்பு வாராமல் போன  பாடல்கள்தான் எத்தனை... "ஸ்ரீதேவி என் வாழ்வில்" ["இளமை கோலங்கள்" கவனிக்க: இளமை காலங்கள் அல்ல], "சங்கீதமே" ["கோவில் புறா"],"காளிதாசன் கண்ணதாசன்" ["சூரக்கோட்டை சிங்கக்குட்டி"] - இதை பிற்பகலில் கிராமத்து பம்பு செட்டில் குளித்துக்கொண்டே  கேட்டுப்பாருங்கள்],"தேனருவியில் நனைந்திடும் மலரோ" ["ஆகாய கங்கை"], "வண்ணம் நீ விரும்பிய வண்ணம்" ["பிரேம பாசம்"]

சிறிது நாட்களில் சைக்கிளில் சுற்றுபவர் உடல்நிலை மோசமானதாகவும் மயக்கம் போட்டதாகவும் தகவல் பரவியது. ஆனாலும் மாலையில் சென்று பார்த்தால் அவர் பாட்டுக்கு மேடையை சுற்றிகொண்டிருந்தார். "Climax" தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. தெரு முழுதும் வைக்கோல் பரப்பி அதில் தீ மூட்ட, பற்றியெரியும் நெருப்பில் tube lights சிதற அதன் நடுவில் அவர் சைக்கிளில் வர வேண்டும். இரு நாட்கள் முன்னராகவே இந்த "climax" மூடிற்கு மக்களை கொண்டு வர ஒரே தத்துவ பாடல்களாக ஒலிக்கத்துவங்கியது. இதில் கேட்கத் துவங்கியதுதான் கண்ணதாசனும் TMSசும். அர்த்தம் ஒன்று கூட புரியாவிடிலும் ஒரு வித "heaviness" உண்டாக்கும் அப்பாடல்களை இரவு பகலாக ஒலிக்கவிட்டு மனதில் தங்கவிட்டு சென்றனர் அந்த சைக்கிள் குழுவினர்.
"மனிதன் நினைப்பதுண்டு", "ஆறு மனமே ஆறு", "சட்டி சுட்டதடா", "உள்ளம் என்பது", "நல்லவர்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு", "கால தேவனின் மயக்கம்","எந்தன் பொன்வண்ணமே", "நிலவை பார்த்து" போன்றவை அந்தப்பட்டியலில் முக்கியமானவை. அவர் சைக்கிளில் நெருப்புக்குள் நுழைவதற்கு முன் போடப்பட்ட பாடல் "சிவப்பு விளக்கு எரியுதம்மா" அதன் பின் விளக்குகள் எல்லாம் நெருப்பினால் உடைந்து வெளிச்சமான தெரு 10 நிமிடம் இருட்டானதும் அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்று அனைவரும் பதறியதும் மறக்க முடியாத நாள்.

இவரின் அடுத்த தலைமுறை இன்று JAVA Code எழுதிக்கொண்டிருக்குமோ?

No comments:

Post a Comment