Saturday, September 29, 2012

25. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 15


சமீபத்தில் சிவகாசியில் நிகழ்ந்த கோரமான விபத்தை பற்றிய செய்திகளை படிக்கையில் ஏற்படும் சோகத்துடன் சேர்ந்து, நம் அனைவரின் ஞாபகமும் ஒரு நொடியேனும் நம் சிறுவயது பட்டாசு தாகத்தின் மீது சென்று திரும்பியிருக்கும். தீபாவளி சமயத்தில் மட்டும் முளைக்கும் மதுரை வக்கீல் புதுத்தெருவில் இருந்த (கடை இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை) "அணில் பட்டாசு கூட்டுறவு விற்பனை" நிலையத்தில் நான் அடம்பிடித்து வாங்கிய 1983ஆம் ஆண்டுக்கான பட்டாசு முப்பத்தெட்டு ரூபாய் நாற்பது பைசாவிற்கான பில் ஒன்று என்னிடம் இருக்கிறது.

நாற்பது ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் கூட, பை கொள்ளாமல் நிரம்பி வழியும் பட்டாசுகளுடன் வீடு திரும்பிய காலம் அது. தீபாவளிக்கு இரு வாரங்கள் முன்பே, அணில் படம் போட்ட விலைப்பட்டியல் ஒன்றை அப்பா வாங்கி வந்து விடுவார். எனது பள்ளிப்புத்தகங்களில் குடியிருக்கும் "அணில்" என்னுடனே பள்ளி சென்று வரும். எந்த பாடம் படிக்கிறேனோ, அந்தப் புத்தகத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். நூறு ரூபாயில் துவங்கும் அந்த வருடத்திற்கான பட்டாசு கனவு, தினமும், "காசை கரியாக்காதே" "உபயோகமாக செலவழி" போன்ற பொருளாதார மேம்பாட்டு அறிவுரைகளினால் தேய்ந்து, நாற்பதில் வந்து நிற்கும். கடலில் குளிக்க நினைக்கும் ஒருவன், கப்பில் நீர் பிடித்து கால் கழுவுவது போன்ற வேறுபாடு அது.

இவ்வளவு தான் பட்ஜெட் என்று உறுதியானவுடன், ஆயிரம் வாலாக்கள் அமைதியாக உறங்கி விட, லட்சுமி வெடி போன்ற, "குறைந்த விலை, அதிக சத்தம், நிறைய பேப்பர்" போன்ற "நடுத்தர வர்க்கத்தின் நண்பர்கள்" வகை பட்டாசுகளை "டிக்" செய்து, "எத்தனை" என்ற column கீழ், பத்தில் எழுதத் துவங்கி, இரண்டு வாரங்களில், அது மூன்று , நான்கு என்று மாறி, எங்கோ துவங்கி எங்கோ முடித்தாலும், அந்த சிறிய தொகையிலும், மனதையும் கையையும் நிறைத்தன அன்றைய தீபாவளிகள்.

நன்றாக நினைவிருக்கிறது அந்த 1983 தீபாவளி. என் அப்பாவுடன் நான் மேற்சொன்ன "அணில்" கடையில் நின்றிருந்தேன். நன்றாக இருட்டி விட்ட வேளை. லேசான தூறல்கள் பட்டாசு வெடிக்க முடியாமல் போய் விடுமோ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தன. ஒரு நாள் கழித்து தீபாவளி. கடையிலிருக்கும் அனைத்தையும் வாங்கி வெடிக்க முடியாதா என்று நினைக்கும் வயது. பட்டாசுகளை நவராத்திரி கொலு பொம்மைகள் போல படிகளில் அடுக்கி வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளின் நடுவே ஒரு பொம்மைபோல ஒரு ரேடியோவும் இருந்தது. "அப்படி இல்லை. தம்பி எவ்வளவு நல்லா..."என்று ஒருவர் சொல்லும், பல‌ முறை கேட்டும் சலிக்காத அந்த பாடலின் ["அமுதே தமிழே" / Suseela , Uma Ramanan / கோவில் புறா / 1981] துவக்கத்தை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

"அமுதே தமிழே" பாடலை, குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் சரணங்களுக்கு முன்னர் வரும் இசையை, அதன் நடுவில் வரும் புல்லாங்குழலை, இறங்கு வெய்யில், மரங்களுக்கிடையில் பேருந்தை துரத்தி நம் மேல் விட்டு விட்டு சுடும் மாலைப் பொழுதில், எதிர்காத்து முகத்தில் அறைய ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கேட்டுப் பாருங்கள்!

இந்தப் பாடல் "கோவில் புறா" என்று கண்டறிந்து, அதன் மூலம் "வேதம் நீ" மற்றும் "சங்கீதமே" பாடல்களுக்குள் நுழைந்து...

"வேதம் நீ" பாடலில் வார்த்தைகளுக்கு சேதாரம் இல்லாமல், இசையின் funnel எடுத்து நேராக நம் மனக்குழிக்குள் சொருகி வரிகளை ஊற்றும் வேலையை இளையராஜா செய்கிறார்.

பட்டாசு வாங்கும் பொழுது பிடித்த கோவில் புறாவின் அழகில் பல ஆண்டுகள் வளர்ந்த‌ பின், தஞ்சாவூரிலிருந்து ஒரு பின்னிரவு பேருந்து ஏறி விடியலில் நாலு மணி அளவில் மதுரையில் இறங்கி உள்ளூர் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தேன். டீக்கடையில் பாய்லர்கள் முதல் கொதிநீருக்கான தங்கள் தினத்தை ஆரம்பித்துக் கொண்டிருந்தன. சட்டென்று மணிக்கட்டு நரம்பை சுண்டிவிட்டது போல "சங்கீதமே" பாடலின் துவக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி வரும் அந்த guitar stroke, நாதஸ்வரம் மற்றும் ஜானகியின்  humming  பேருந்து நிலையத்தையே ஒரு சோகக் கரைசலில் முக்கி எடுப்பது போல ஒலித்தது...

கிடாரின் மேல் நாதஸ்வரம் உட்கார்ந்தால் நாம் என்னாவோம் என்பதை நமக்கு இளையராஜாவைத் தவிர யார் உணர்த்தியிருக்கிறார்கள்?

"பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்" என்னும் வரி நமக்கு புரியத்துவங்கும் பொழுது நாம் வாழ்க்கையில் திரும்ப முடியாத தொலைவில் வயது நம்மை வைத்து விடுகிறது இல்லையா? அப்பொழுது நமக்கு நாமே "ஆதாரம் என நான் தேடியது ஆகாததென ஏன் ஆகியது?" என்று கேள்வி கேட்டுக் கொள்வோமோ?

Thursday, September 6, 2012

24. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 14


நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வும் காலம் வரையும் ஓவியம் என்று சொல்லலாம் இல்லையா? ஒரு முறை வரைந்த ஓவியத்தை காலம் பெரும்பாலும் மறுபடி வரைவதே இல்லை. மறுமுறை வரைந்தாலும் அதன் "வண்ணம்" முன்னர் வரையப்பட்ட ஓவியத்தின் வண்ணம் போல் இருப்பதே இல்லை. காலம் வரைந்த அத்தகைய ஓவியங்களை நாம் மீண்டும் மீண்டும் துடைத்து வாழ்க்கைச்சுவரில் அடிக்கப்பட்ட‌ வயதின் ஆணியில் மாட்டுவதுதான் நினைவு என்பதோ?

செந்தில் குமார் அன்று "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" பாடலை குழலில் வடித்தபின், "உங்களுக்கு இந்த பாட்டில் எந்த வரி பிடிக்கும்?" என்றார். "ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி" என்றேன். சூழலுக்கு பொருத்தமாக நாங்கள் அமர்ந்திருந்த ஆலமரமும், தனது மகிழ்ச்சியை காட்டுவது போல் விழுதுகளை லேசாக அசைத்தபடி இருந்தது. அந்த வரியை ஒருமுறை பாடிப் பார்த்த அவர், "நீங்கள் நினைவுகளை விழுது போல பார்க்கிறீர்கள். நாங்கள் விழுதை நினைவாக பார்க்கிறோம்." என்றார். நாக்கின் மேல் கல்லை வைத்தது போல நகர்த்த முடியாத‌ வார்த்தைகளுடன் நின்றேன் நான்.

இந்தப் பாடலை ஊன்றி கவனித்தால்,

மூன்று விதமாக பாடப்படும், மூன்று முறை வரும் இந்தப் பாடலில் ஒரே ஒரு சொல் மட்டுமே மாறுபடும். நினைவுகள் (நினைவுகளினால்?) வாடுவதற்கும் வாழ்வதற்கும் உண்டான வித்தியாசமே அது.

ஸ்வர்ணலதா பாடுவதில், உள்ளத்தில் ஆடும் உணர்வின் அண்மையும், ஜேசுதாஸ் பாடுவதில், நழுவிக் கொண்டிருக்கும் உணர்வில் நாட்டம் கொள்ளும் தன்மையும், இளையராஜா பாடுவதில் ஒன்றில் ஒட்டியிருந்தும் எட்டி நிற்கும் பன்மையும் வெளிப்படும். அதற்கு அச்சாரம் போடுவது போல, பாடலின் துவக்கத்தில் வரும் கிடார் ஸ்வர்ணலதாவுடனும் ஜேசுதாசுடனும் வெவ்வேறு "கனம்" தாங்கித் துவங்கும். இளையராஜாவிடம் இந்தத் துவக்கமே இராது.

இந்த‌ உணர்வுகளின் திரியை பிரித்துக் காட்டும் விதமாக, மூன்று பேரின் பாடல்களிலும் இசையின் அமைப்பு ஆங்காங்கே வேறுபடும்.

ஸ்வர்ணலதா மற்றும் ஜேசுதாஸ் பாடும் இரண்டு பாடல்களிலும், சரணங்களின் வரிகளுக்கு அடியிலும் இடையிலும்  வயலின் அமைதி காத்து, "பாதச்சுவடுகள் போகும்" மற்றும் "ஆலம் விழுதுகள் போலே" ஆகிய வரிகளுக்கு முன் மீண்டும் தலை தூக்கி, இரண்டே வரிகளில் அடங்கி விடும்.

இளையராஜா பாடுவதை கேளுங்கள்...ஒரே சரணம் தான். அந்த சரணத்தின் துவக்கத்தில் வருவதும் மற்ற இருவர் பாடுகையில் வரும் அதே வயலின் தான். ஆனால் இப்போது புல்லாங்குழல் என்னும் "பாத்திரம்" வயலினிலிருந்து வழியும் உணர்வை, அதே வடிவில் தேக்கி வைத்துக் கொள்ள உடன் வருகிறது!

ஒரு அகலமான சாலையில் நாம் பயணம் செய்யும் பொழுது, ஒரு கீறலாக கிளம்பி, எங்கோ நீண்டு கொண்டு போகும் ஒற்றையடிப் பாதைகள் போல, அந்த பாதை எங்கு போகுமோ என்று நம்மை நினைக்க வைப்பது போல, ஒவ்வொரு வரியின் முடிவிலும் புல்லாங்குழல் நீண்டு புரள்கிறது...

மற்ற இருவர் பாடுகையில் "ஆலம் விழுதுகள் போலே" வரிகளின் வேரில் பொங்கி வழியும் வயலின், இளையராஜாவின் ஆலம் விழுதில் அமைதியாகி மறைந்து விடும்! அந்த அமைதியின் ஆழத்தை மேலும் தோண்ட முயல்கிறது தபேலா. அதில் சிதறும் நினைவை கொத்தியெடுத்து நம் மீதே மீண்டும் பூசுகிறது அதனுடன் வரும் கப்பாஸ். அவ்வாறு மறைந்து போன அதே வயலின், அந்த இரண்டு வரிகள் முடிந்தபின் மீண்டு வந்து காற்றில் நீந்துவது மற்ற இருவரின் அதே வரிகளில் கிடையாது!

செந்தில் குமார் வாசித்த புல்லாங்குழலின் வழியே காலம் வரைந்து போன அந்த மதியம் கடந்து சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, நான் MCA இறுதி ஆண்டில் இருந்தேன். தினமும் பசுமலை பள்ளியை கடந்து தான் எங்கள் கல்லூரிக்கு போய் வர வேண்டும். ஒரு நாள் மாலை நான் திருப்பரங்குன்றத்திலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். பசுமலை bus stop அருகில் அவரை போன்ற‌ ஒருவர், ஒரு பெண்மணியுடன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நான் பேருந்திலிருந்து இறங்கி, அவர் அருகே சென்று "நீங்கள் செந்தில் குமார்தானே..." என்றேன். எனக்கு இருந்த சிறிதளவு சந்தேகம் கூட இல்லாமல் "என்ன குமரன் எப்படி இருக்கீங்க" என்றார் தாமதமின்றி. அவரின் மனைவியை அறிமுகப்படுத்தி, இருவருமே இசைப்பள்ளியில் பணிபுரிவதாக சொன்னார். செந்தில் குமாருக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரி "விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம்தான்". அவர் மனைவிக்கும் அது பிடித்த வரியாக இருக்கக் கூடும் என்பது, அவர்களிடம் விடைபெற்று பேருந்தில் ஏறிய பின்,  அவர்கள் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்தபடி தொலைவில் நடப்பதை பார்க்கையில் தோன்றியது.

"ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி". அந்த விழுதுகளின் அர்த்தத்தைத் தானே நாம் நிகழ்காலத்தில் தேடி, எதிர்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்?