Friday, October 12, 2012

26. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 16


கதைகளிலும் பாடல்களிலும் மட்டுமே தன் வடிவை காட்டி, கற்பனைகளில் மட்டுமே அதன் அழகு பற்றிய சிந்தனையை ஊட்டி வருடங்களை கடத்திக் கொண்டிருந்த காவிரியை உடம்பில் ஊற்றி உள்ளத்தில் ஏற்றும் சந்தர்ப்பம் 1991 ஆண்டு வாய்த்தது.

நதி என்பது எத்தனை அதிசயங்களை தன்னுள் வைத்திருக்கிறது!ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு விதம். அவற்றில் ஓடும் நீரின் தன்மை வேறு. அத்தகைய நீர் நிற்கும் மண்ணின் அமைப்பு வேறு. அந்த மண் மேல் வாழும் உயிர்களின் பண்பு வேறு. நதியின் அதிசயங்கள் பூமிக்கு அவசியம். நதிக்கும் உயிர் உண்டு. அதனுடன் நமக்கு உறவு உண்டு. அதனால் தான் நாம் நீராடும் வெவ்வேறு நதிகள் வெவ்வேறு உணர்வுகளை, நினைவுகளை நமக்குக் கொடுத்துப் போகிறதோ? "நான் தாமிரபரணி தண்ணீர் குடித்து வளர்ந்தவன்", "எனக்குள் காவிரி ஓடுகிறது" என்று நாம் சொல்கிற போதே, மனது முழுதும் ஒரு சுவை ஓடுகிறதே...நம்மை நதியின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா அல்லது நதியை காலத்தின் நாக்கில் வைத்து தேய்க்கும் சுவையா?

எந்த ஊருக்குச் செல்வதாக இருந்தாலும், எனக்கு எழும் முதல் சிந்தனை, அந்த ஊரில் கடலோ நதியோ மலையோ இருக்கிறதா என்பது தான். 1991 வருடம் குடியரசு தினத்திற்கு முந்தைய நாட்களில் என் உறவினர் ஒருவரின் திருமணம் ஸ்ரீரங்க‌ம் ஊரில் நடந்தது. அந்த திருமண அறிவிப்பு வந்தது முதற்கொண்டு, காவிரியில் குளித்தாக வேண்டும் என்ற ஆவல், பாலில் கொட்டிய அவல் போல மனதில் குழைய‌த் துவங்கியிருந்தது. Srirangam கோபுர வாயிலுக்கு போகும் தெருவில்,கோபுரத்திற்கு நேரெதிர் திசையில் நடந்தால், வலப்புறம் வரும் "ராகவேந்திர மடம்" கடந்து, இடது புறம், ரயில்வே தண்டவாளத்திற்கு ஒட்டியவாறு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கல்யாணம் முழுவதும் காவிரியை நினைத்தபடி திரிந்தேன் நான். திருமண தினத்தன்று மதியம், எனது "பிடுங்கல்" தாங்காமல், உறவினர் கூட்டமொன்று எவரெவரிடமோ வாங்கிய சைக்கிள்களில் என்னையும் ஏற்றிக் கொண்டு பெயர் தெரியா வீதிகளில்... தென்னந்தோப்புகளின் இடையே மெலிந்திருக்கும் மண் சாலைகளின் வழியே... எனச் சுற்றி, ஒரு படித்துறையில் இறங்கியது. காவிரியில் என் முதல் குளியல்! தலைமுடிகளின் பல நுனிகளில் காவிரியின் குமிழ்கள் கண்சிமிட்டியபடி என்னுடன் வர, காவிரியில் குளித்த மகிழ்ச்சியின் வடிவம் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காக அந்த பெருநதியின் சிறு குமிழ்களில் ஒன்றை உருவி விரல்களில் வைத்துப் பார்த்திருக்கிறேன்..பாதி காய்ந்த தலையுடன் திரும்பி வரும் வழியில் தென்பட்ட "பெட்டிக் கடை" ஒன்றில் "கலர்" குடிக்கையில் மனதில் வாசமேற்றத் துவங்கியது "திருச்சி வானொலியில்" பூத்த "தாழம்பூவே வாசம் வீசு" [கை கொடுக்கும் கை / SPB - Janaki / 1984 / ].

நம் நெஞ்சின் மீது பாறாங்கல்லை தூக்கி வைப்பதற்கு இளையராஜாவின் கைகளில் இருக்கும் எடையற்ற‌ வயலின் bow ஒன்று போதும். இந்தப் பாடலின் "பேசும் போது..." மற்றும் "நீரும் போனா..." ஆகிய இரண்டு இடங்களில் நம் மன வயலில் இறங்கும் வயலின், உழுது உழுது, நீண்டு வளைந்து, ஏறி இறங்கி விதைக்கும் இனம் புரியாத பாரத்தின் விளைச்சலை காலத்தின் பயிர் எனலாமோ?

அன்று இரவு, மாடியில், தென்னை மரங்களை பார்த்த வாக்கில் படுக்கை. நிலவின் கீற்று தென்னங் கீற்றுகளில் முகம் பார்த்துக் கொண்டிருக்க, எத்தனை முறை என்னுடன் புரண்டது அந்த இரண்டு சரணங்களின் இடைவிடாத வயலின்!


இப்பொழுது என்னை ஸ்ரீரங்கம் கொண்டு போய் விட்டாலும், அந்த ஊர் அடையாளம் தெரியாமல் மாற்றம் கண்டிருந்தாலும், காலத்தின் முதுகில் ஏறிக்கொண்டால் அதே படித்துறைக்கு அது என்னை இட்டுச் சென்று விடும் என்று திடமாக நம்புகிறேன்.

காவிரி மட்டுமா? கால நதி புரண்டோடும் வழியெங்கும் மீதமிருப்பது நினைவின் படித்துறைகள் தானே?



3 comments:

  1. உருக்கமான பதிவுகள். நன்றி.

    ReplyDelete
  2. Subject your have taken and narrations are beautiful. bringing those golden days back write more - Gopalan

    ReplyDelete
  3. excellent blog. thanks. raja

    ReplyDelete