Saturday, November 10, 2012

28. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 17

தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படிப்பட்டது? ஒவ்வொரு ஊரிலும் வீட்டிலும் வெவ்வேறு அனுபவங்களைத் தாங்கியதாக அது இருக்கும். மதுரையில் தீபாவளி இரவு என்பது "விளக்குத்தூண்" என்ற சொல்லின் அடையாளம் எனலாம். மதுரையில் வளர்ந்த அனைவருமே ஒரு முறையேனும், அந்த இரவில், நெட்டித் தள்ளும் மனித சமுத்திரத்தின் நடுவே விளக்குத்தூண் நோக்கி நடந்து போயிருப்பர்.

தீபாவளிக்கு முன் தினம் காலையிலிருந்தே நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாசி வீதிகளிலும், அவற்றின் குறுக்கே வெட்டிப் போகும் திண்டுக்கல் ரோடு,  town hall road போன்ற தெருக்களிலும் சாலை முழுவதும் கடைகள் முளைக்கும். குடை, குடம், சேலை என்று ஏதேதோ பொருட்கள் நினைக்க முடியாத‌ விலையில் கூவப்பட்டு ஆளை இழுக்கும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் குவியத் துவங்குவர்.

மதியம் நடக்க முடிகின்ற அளவில் இருக்கும் கூட்டம், இரவு தொடங்கி, ஒவ்வொரு அடி முன்னேறுவதற்குள் மூச்சு முட்டும் அளவில் அதிகரிக்கும். சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் பூம்புகார் நகரத்தின் இந்திர விழா, இரவு நேரத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றும்! இந்த இரவு "ரோந்து" முதன் முதலில் எனக்கு வாய்த்தது 1987ல்.

இரவு உணவு உண்டபின் சுமார் பத்து மணிக்கு துவங்கும் இந்த "சுற்று" விடிகாலை மூன்று மணியளவில் நிறைவுறும். "சிட்டி சினிமா" அருகில் மரத்தட்டிகளினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தெருவோர கடையொன்றில் "தாய்மார்களே..." என்று துவங்கி, ஒரு ஒலிபெருக்கி அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. இந்த "அழைப்பின்" இடையே, மீண்டும் மீண்டும் ஒரு இசை சில நொடிகள் வருவது போல "set" செய்திருந்தார்கள். அந்த இசைக்கு நடுவே மீண்டும் "தாய்மார்களே" என்று துவங்குவார். முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் என்று சேலைகளை ஒருவர் அலை போல வானத்தில் பறக்க விட, அந்த அறிவிப்புக்கு இடையே வந்த இசையின் உள்ளே இருந்த வயலின் சட்டென்று என்னைப் பிடித்துக் கொண்டது.

"மெல்ல மெல்ல" என்னும் பாடல் துவக்கத்தில் (வாழ்க்கை / 1984 / சுசீலா / ராஜ் சீதாராமன்) வருவதே அந்த வயலின்.வயலினை நம் வாய்க்குள் போட்டு சுவைக்க முடியுமா? இந்தப் பாட்டில் முடியும். இந்த வயலினை கேட்க கேட்க, அதன் நெளிவு சுளிவுகள் நம் நாக்கில் ஏறி உட்கார்ந்து கொள்ளும். பிறகு, நமக்கு பிடித்தமான மொழியில் பொருத்தமான எழுத்தை எடுத்து அதை நமக்குப் பிடித்தமான நினைவில் மடித்து, அந்த வயலினை, வார்த்தையாலேயே நாம் வாசிக்கலாம்! ஒரு "த" அல்லது "ன" அல்லது "ம்" எடுத்து, இந்த வயலின் ஓட்டத்திற்கு ஏற்றபடி சொல்லிப் பாருங்கள்...இதன் உதவியுடன், எத்தனை தொலைவையும் அலுப்பின்றி உற்சாகமாக‌ கடந்து சென்று கொண்டேயிருப்போம் நாம்!

"வெங்காய வெடி" மீது அந்நாட்களில் எனக்கு ஒரு கண். இந்த "மெல்ல மெல்ல" வயலினை வாயினால் வாசிக்க முயன்ற படி அந்த தீபாவளி இரவு முழுதும் வெங்காய வெடி கிடைக்கக் கூடிய குறிப்பிட்ட இடங்களில் வலம் வந்தோம். இறுதியாக, கீழவாசல் சந்திப்புக்கு முன்னர், இடது புறம் ஒரு இருட்டுச் சந்தில், சாக்குக்கு அடியிலிருந்து ஒரு "உறை" பையிலிருந்து அவர் எடுத்துக் கொடுத்த போது, இளையராஜா அங்கும் வந்து அந்த வயலினை மனதுக்குள் வாசித்துக் கொண்டிருந்தார்.

சுமார் பத்து வருடங்கள் கழித்து, மற்றுமொரு தீபாவளி இரவு..."உலா" போவதற்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுது, சென்னை தொலைக்காட்சியில் இளையராஜாவின் குழுவில் இருந்த ஒருவரின் பேட்டி ஒலிபரப்பானது. அதை பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று அமர்ந்திருந்தேன். பேட்டியின் இறுதியில், அவரை, பிடித்தமான ஒரு வயலின் bit வாசிக்கும்படி கேட்டார் கேள்வியாளர். "மெல்ல மெல்ல" பாட்டில் வரும் வயலின் எத்தனை கடினமானது என்று விளக்கிய அவர், தனக்கு மிகவும் பிடித்தமானது என்று  அதையே வாசிக்கத் துவங்க, நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் ஓடத்துவங்கின...

அதன் பின், அன்றைய இரவு நான் தீபாவளி உலா போன பாதையெங்கும், பத்து வருடத்திற்கு முந்தைய நினைவுகள், நிலா போல இரவு முழுதும் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது...மனதுக்குள் அந்த வயலினுடன்...

நினைவுகளை கோர்ப்பது காலத்தின் கயிறா? அல்லது கோர்க்கப்பட்ட நினைவுகளுக்கு காலம் என்று பெயரா?

2 comments:

  1. Hi,

    There is a daily quiz going on here ( http://365rajaquiz.wordpress.com/ ) from Ilayaraja songs, please come and participate in the quiz.

    ReplyDelete
  2. அருமை...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete