Saturday, December 8, 2012

30. இப்படியும் சில புதிய பாடல்கள் பகுதி 2


அந்த நெடுஞ்சாலையில், இரவின் அமைதியை துரத்திய படி வேகத்தில் வழுக்கிக் கொண்டிருந்தது பேருந்து. நினைவுகள் வழியும் மனதை நித்திரை தழுவியது போன்ற பாவனையில் கண் மூடியபடி இருந்த பல பயணிகளில் நானும் ஒருவன்.

"தினம் தினம் நான்" பாடலின் சுவை அதன் "rendering"ல் இருக்கிறது. பாடலின் எந்தெந்த வார்த்தைகளில் ஏகாரம் வருகிறதோ, எந்தெந்த வார்த்தைகளில் நெடில்கள் நேர்த்தியாக நீட்டிக்கப் பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பாடகர் நம்மை உணர்வுகளின் சிகரங்களில் ஏற்றி இறக்குகிறார். பேருந்தின் அசைவின் மேல் மற்றொரு அடுக்காய் நகரும் இந்த "ஏற்ற இறக்கம்" துயரத்தின் சிறகுகளை நம் எண்ணத்தில் பொருத்தி, நினைவுகளில் மனதை இருத்தி, தண்ணீரில் தோய்த்து எடுக்கப்பட்ட பறவையின் தத்தளிக்கும் சிறகு போல தடுமாறி பறக்கிறது...

இப்படியாக எனது சிறகை நான் உலர்த்திக் கொண்டிருந்த பொழுதுதான் பக்கத்து இருக்கையிலிருந்த முதியவரிடமிருந்து அந்த ஒலி கேட்டது.  முதலில் அது அலைச்சலுக்கு பிந்தைய ஆயாசத்தின் ஒலி போன்ற தோன்றியது. "ச்" என்று அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த‌ ஒலி,  முதுமை அர்த்தப்படுத்த முயலும் வெறுமையின் சித்தமாக‌ இருக்கலாம். அல்லது காலத்தின் முள் குத்திய இடத்தில் முதுமை இடும் முத்தமாகவும் இருக்கலாம். அல்லது பாடலின் ஏதோ வரி அவரின் நினைவு மீனை கால நதியிலிருந்து குத்தியெடுத்து கரையில் போடும் சத்தமாக இருக்கலாம்...

"வேர் நான் இழக்கிறேன்" என்னும் பொழுதும் அவரிடமிருந்து மீண்டும் அதே ஒலி. அவரின் நினைவு மீன் தரையில் குதிக்கிறதோ என்று நினைப்பதற்கான‌ சாத்தியக்கூறு அதிகமாயிற்று. இதற்கிடையில் இரண்டாம் சரணத்திற்கு முன் அபார வேகத்துடன் வந்து போன‌ வயலினை, பேருந்தின் வேகத்துடன் இணைந்து கேட்கையில், அந்த இரண்டின் இடையிலும் ஒரு லயம் இருப்பதாக வெளியில் மண்டியிருந்த இருள் பேருந்துடனே ஓடி வந்து சொன்னது.

"கனவாய் வாழ்க்கை கரைந்தால் நல்லது" என்ற போது, எதிரின் வந்த பேருந்து தந்த வெளிச்சத்தில் எனது கண்ணும் அவரின் காலமும் சந்தித்துக் கொண்டது அவரின் கண்ணில் தெரிந்தது. ஒரு நொடி என்னைப் பார்த்து, "பாட்டு நல்லாருக்குப்பா" என்றார். பிறகு அவரின் கரையில் விழுந்த மீனை மீண்டும் நதிக்குள் விடும் முயற்சியில் மெளனமானார். பேருந்தில், நிறைய பேரின் பிரத்யேக நதியிலிருந்து நிறைய மீன்கள் கரையில் விழுந்து கொண்டிருக்கக் கூடும்...கால நதி...நினைவு மீன்...

இத்தகைய பேருந்து பயணங்களில், பாடல்கள் முடிந்தபின், சட்டென்று ஒரு நிசப்தம் நிலவும். குளிர்விக்கப்பட்ட விளக்கில் மீதமிருக்கும் திரியின் வெப்பம் போல, அப்பொழுது வலம் வந்த நினைவுகளின் மீதம் சிறிது சிறிதாக ஞாபகப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டு பூட்டப்படும் பொழுதுகள் அவை.

அதிகாலை. அரைகுறை தூக்கத்துடன் பேருந்திலிருந்து அவரவரின் அன்றைய வாழ்க்கைக்கு வரிசையாக இறங்கினோம். "cooperative bank" பையுடன் இறங்கிய முதியவர், குளிர் வழியும் காலை நேர சாலையில் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார்...விருப்பமுற்றோ விருப்பமற்றோ நாம் தின்ற காலத்தை அல்லது அது நம்மைத் தின்ற மாயத்தை உணர்வுகளால் மீட்டெடுத்து ஞாபகத்தின் உலையிலிட்டு நினைவுகளாய் சமைத்து வைத்து மீண்டும் மீண்டும் வாயிலிட்டு மென்று விழுங்க முயல்வதே முதுமையா? அதற்கான ஏற்பாடுதான் இளமையா?