Sunday, November 23, 2014

41. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 24

உடல் மட்டுமல்லாது மனதின் அடி முதல் நுனி வரை சில்லிடச் செய்யும் பனி விழும் இரவின் துவக்கத்தில் நண்பர்கள் குழுவுடன் ஊட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன் நான்...கோவைக்குச் செல்லும் இறுதிப் பேருந்து கிளம்புவதற்கு சற்று நேரமிருந்தது. வாயைத் திறந்து ஊதினாலே பனி பல வடிவமெடுத்து நம்முன் நடனமாடுவது போல நகர்ந்து போகும் அழகை பார்த்து வியந்து கொண்டிருந்தோம்...

அரசு பேருந்துக்கே உரிய அரைகுரையாக இயங்கும் ஷட்டர்களின் வழியே ஊடுருவிய பனிக்காற்றில் பேருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே ஸ்வெட்டர்கள் தாண்டி நாங்கள் சில்லிட்டுப் போயிருந்தோம்...வண்டியில் லைட் வெளிச்சத்தில் பனி படர்ந்த மரங்கள் அடர்ந்த மலைப்பாதை உருகிய மெழுகால் உருவாக்கப்பட்ட ஓவியம் போல இருந்தது...

குளிர் குறைந்ததாக உணர்ந்த போது நள்ளிரவுக்கு அருகில் எங்களை கோயமுத்தூர் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ஷெட்டுக்கு போய் விட்டிருந்தது அந்த பேருந்து. அஞ்சு மணிக்குத்தான் மதுரைக்கு முதல் பஸ் என்று தெரிந்து வாயிலுக்கு அருகிலேயே இருந்த நடைபாதையில் அமர்ந்து கொண்டோம். அவ்வாறே இன்னும் சில பயணிகளும் ஆங்காங்கே நின்றும் அமர்ந்தும் அன்றையே இரவின் மறுபகுதியை கடக்க ஆயத்தமாயிருந்தனர்.

இருவர் தூங்க நால்வர் விழித்திருக்க அனைவருக்கும் ஒரு மணி நேரத் தூக்கம் என்ற திட்டத்துடன் அனைவரும் தூங்கி விழித்த போது பேருந்து நிறுத்த வாசலுக்குப் பக்கத்திலிருந்து வந்த ஊதுவத்தி மணமும் பாய்லர் சத்தமும் அதிகாலை நான்கைத் தாண்டியதை அறிவித்தது. அனைவரும் டீ வேண்டி அடுத்த நிமிடம் அக்கடை முன் இருந்தோம். டீக்கடைக் காரர் பத்து நிமிடம் ஆகுமென்றபடி அன்றைய கடைக்கான அன்றாட ஆயத்தங்களை செய்யத் துவங்கினார். திருநீறு நிரம்பிய நெற்றியும் தொப்பைக்குப் பொருந்தாத கலர் பனியனுமாய் அவர் அங்குமிங்கும் கடைக்குள் அலைவதை டீக்கான ஆவலுடன் பார்த்திருந்தோம்...

"மதுரையா?" என்றார் டீக்கடைக்காரர் எங்களிடம். நாம் பேசும் வார்த்தைகளையும் உச்சரிப்பையும் வைத்தே நம் ஊரை எவரேனும் கண்டுபிடிக்கும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் ஏற்படும். "ஆமா" என்று வெளிப்பட்ட அந்த மகிழ்ச்சியில் சேர்வது போல, "நானும் மதுரைதான் ஓடின ஓட்டத்துல கோயமுத்தூருக்கு வந்து நின்னாச்சு" என்று அசால்டாக ஒரு தத்துவத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு வேலையைத் தொடர்ந்தார்...

பொதுவாக டீக்கடைகளில் முதலில் ஏதேனும் பக்தி பாடல்கள் தான் போடுவார்கள். கடவுள் மீது பற்றா அல்லது வியாபாரம் பற்றியா கவலையா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால் நாங்கள் நின்று கொண்டிருந்த டீக்கடையிலிருந்து, நெற்றியில் பட்டையுடன் இருந்தவரிடமிருந்து அந்த அதிகாலை வேளையில் "கும் கும்" என்று காதுக்குள் இடிப்பது போன்ற கிடார் சத்தத்துடன் ஒரு பாடல் [உன்னை வாழ்த்தி பாடுகிறேன் / 1991 / ஜேசுதாஸ் / ஜானகி] "ஒரு ராகம் தராத வீணை" என்று கிளம்பியதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அமைதியாக இருந்த அந்த சூழலில், காற்றில் நடந்து வரத்துவங்கியது ஜானகியின் ஹம்மிங். பொழுதின் தொட்டிலில் நம்மை போட்டு தாலாட்டுவது போல இருந்தது அது. மிகவும் வித்தியாசமாக, மிக அதிகமாக "bass" வைத்தது போல, அந்தப் பாடல் கடையிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பால் கொதிப்பதை அறிந்த நாங்கள் அருகில் சென்று நின்று கொண்டோம்.

கடை கூரையின் நான்கு மூலைகளிலும் பானை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குள் இருந்துதான் அந்த "கும் கும்" வந்து கொண்டிருந்தது. நாங்கள் பானையை பார்த்தபடி இருந்ததை பார்த்த கடைக்காரர், "ஸ்பீக்கர்தான்... பானைக்குள்ள வச்சிருக்கேன் என்றார்". பானைக்குள் ஸ்பீக்கர் வச்சு கேட்டா பாட்டே வேற மாதிரி கேக்குமுங்க சாதா ஸ்பீக்கர் கூட தியேட்டர் எபெக்ட் கொடுக்கும் என்றார். உண்மையிலேயே அப்படித்தான் இருந்தது. ரப்பர் பேண்டை இழுத்து தோல் மேல் விட்டது போல விழுந்தது பாடலில் வரும் அனைத்து வாத்தியங்களிலும் விழுந்த ஒவ்வொரு அடியும். ஊர் திரும்பிய சில நாட்களில் தண்ணீர் பானையை ஸ்பீக்கர் மேல் கவிழ்த்தி வைத்த போது அம்மா, இவனுக்கு என்னாயிற்று என்ற கவலையுடன் என்னை பார்த்தது ஞாபகமிருக்கிறது. "இந்தப் பாட்ட ரெண்டு வருஷம் முன்னாடி கேட்டேன். அப்பறம் தினம் இந்தப் பாட்டப் போட்டுத்தான் பொழுத துவக்கறது. இளையராஜா பாட்டுன்னு தெரியும் ராகம்னா என்ன தாளம்னா என்னாங்கறதுலாம் நமக்கெதுக்குங்க காலைல பாட்டப்போட்டா ஒரு ஏலக்கா டீயை உள்ள இறக்கின மாதிரி இருக்கு" என்றபடி எங்களிடம் டீ கிளாஸ்களை நீட்டினார். பாடல் முடியும் தருணத்தில் இருந்தது. டீ குடிக்கும் முன்பாகவே குடித்து முடித்தது போன்ற நினைப்பு எங்களுக்கும் தோன்றியது. பாட்டு ஆரம்பத்துல வர ஜானகியோட ஹம்மிங்குக்கும் காலை நேரத்துக்கும் எப்படியோ இளையராஜா முடிச்சு போட்டுருக்கார் என்றான் நண்பன். ஊரெங்கும் பொழுது புலர்ந்திருந்தது...

5 comments:

  1. ராஜா ராஜா தான்...அனுபவித்து எழுதி எழுதியுள்ளீர்கள்..என்னிடம் அந்த பாடல் உள்ளது...நாளை காலை முத்

    ReplyDelete
  2. a good narration.... almost all of us would have experienced such experiences

    ReplyDelete
  3. 1970ல் இதே போல் திருச்சியில் ஒரு இரவில் ரயிலுக்குக் காத்துக் கொண்டிருந்தபோது வெளிவரவிருந்த வசந்த மாளிகை படத்தின் பாடல்களை திரும்ப திரும்ப இரு நண்பர்களோடு கேட்டது நினைவிற்கு வந்தது.

    உங்களை இங்கே ’திட்டியிருக்கிறேன்’. வாசித்துக் கொள்ளுங்கள். - http://dharumi.blogspot.in/2014/11/804.html

    ReplyDelete
  4. நல்ல வரிகள்.அருமையான படப்பிடிப்பு. பாட்டைவிட நீங்க எழுதுவது படிக்க நல்லா இருக்கு.

    தருமி ஐயா, நீங்க குடுத்த லிங்க்ல போனா உங்களுக்குத்தான் கண்ணா பின்னா ன்னு திட்டு கெடச்சிருக்கு போல தெரியுதே.

    ReplyDelete
  5. திரு. குமரன் அவர்களுக்கு,

    உங்கள் வலைப்பூவை எப்படி எப்படியோ தேடி இன்று புதியகாற்று மூலம் வந்துவிட்டேன். முதல் பதிவில் ஆரம்பித்த பொழுது வந்தேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் மதுரை என்றும், டி.வி.எஸ். பள்ளியில் படித்தவர் என்பது மட்டும் தான் நியாபகம். எல்லாம் மறந்து விட்டது. மீண்டும் முதலிருந்து வருகிறேன்.

    நீங்கள் கேட்ட பாடல் கேட்டு எங்களுக்கும் அந்த காலகட்டதிருக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு மேலிடுகிறது. நெறைய அனுபவிங்க.

    ReplyDelete