Saturday, January 16, 2016

44. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 27

நகரத்து தெருக்களில் நாராசமாய் ஒலிக்கும் மானுட அவசரத்தின் பிரதிபலிப்பான வாகன ஹாரன் சத்தம் தவிர்த்து வேறேதும் இன்று இருக்கிறதா? முப்பது வருடங்களுக்கு முன் இருந்த தெருவை இன்று நினைப்பில் கூட நம்ப முடியுமா?

மதுரை நகரின் மையப் பகுதியில், இன்று நடக்கக் கூட இயலாத நெரிசல் மிகுந்த சாலையில் தான் அன்றும் இருந்தது எங்கள் வீடு. கார்கள் போனால் அதிசயம்...இருசக்கர வாகனங்களை கணக்கிட்டு விடலாம்...அவ்வப்போது வெள்ளி நிற பேருந்து மட்டுமே போகும் தார் மேல் மெளனம் தடவிய சாலை எங்களது. அதிலும் ஞாயிறு என்றால் மெளனமோ மெளனம்..."இளையநிலா" எதிர்பாரா இடங்களில் எல்லாம் எவ்வாறு புகுந்து இளைப்பாற்றுகிறது என்பதை  எங்கள் தெரு உணர்த்திய மற்றுமொரு நிகழ்வே இப்பதிவு.

வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஞாயிறு மதிய உணவுக்குப் பின் உறக்கத்தில் இருந்த நேரம். நான் வீட்டின் வாசற்படிக்கட்டில் அமர்ந்து பட்டம் தயார் செய்து கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் தெரு வழியே ஒரு அதிசயம் கடந்து போகும். அது பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் தான் நடக்கும். அன்றும் அந்த கறுப்பு அதிசயம் தெருவின் தொலைவில் தெரிந்தது. புசுபுசுவென்ற ரோமத்துடன், ஒரு பெரிய பொதிக்கு கால்கள் வந்தது போல மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது கரடி. அதன் வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பெல்ட் கழுத்தில் ஒரு சுற்று சுற்றி நீண்டு ஒரு தாடி வைத்த மனிதனின் கைகளில் முடிந்திருந்தது...

பாதி செய்திருந்த பட்டத்தை வீட்டுக்குள் வீசியெறிந்து விட்டு கரடி அருகில் வர ஆவலுடன் காத்திருந்தன...எங்கள் வாசற்படி தெருவில் வருவோர் போவோர் சற்று நேரம் அமர்ந்து செல்ல வாகான வடிவம் கொண்டது. கரடி வித்தைக் காரனும் கரடியும் எங்கள் வீட்டின் முன் நின்றனர். ஒடிசலான ஓங்கி வளர்ந்த அவரின் முகத்தில் பழுப்பேறிய தாடி தனித்து நின்றது. ஆங்காங்கே கிழிந்திருந்த ஜோல்னா பை கனமாக தெரிந்ததால் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவல் ஏற்படுத்தியது. ஜோல்னா பையின் நுனியில் ஒரு கயிற்றில் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பின்புற மூடி வறுமையில் தொலைந்திருக்கக் கூடும். சர்க்யூட்டும் பாட்டரியும் வெயிலும் புழுதியுமாய் வெளியில் தெரிந்தபடி இருந்தன...

கரடியின் கண்கள் தண்ணீரில் முக்கியெடுத்த கோலிகள் போல் மினுமினுத்தன. உயர்ந்த வாசற்படியை தன் இரு கைகளினால் பிடித்து எம்பியபடி என்னை பார்த்தது அது. இறங்கு வெயிலின் தகதகப்பில் கரடியையும் அதை பிடித்தபடி நிற்கும் மனிதனையும் கண்ட காட்சி ஒரு அழகோவியம் போல் அடிமனதில் இன்றும் இருக்கிறது. ஜோல்னா பையில் இருந்து ஒரு அழுகிய திராட்சையை எடுத்து கரடியின் வாயிடுக்கில் வைத்தார் அவர். மேலும் கீழும் தலையை ஆட்டியபடி ஒரு குதிகுதித்து மீண்டும் நடக்கத் துவங்கியது அது.

காடும் காட்டுயிரும் என்றுமே வியப்பும் மகிழ்வும் ஊட்டுபவை. கரடியை தொடர்ந்து போனால் காடு பார்க்கலாம் என்று தோன்றியது எனக்கு. வீட்டின் அகன்ற கதவை சாத்துவதற்கும் தோன்றாது அவர்களின் பின்னே நடக்கத் துவங்கினேன். திண்டுக்கல் ரோடு ஆரியபவன் சந்திப்பில் கரடியை சுற்றி கூட்டம் கூடியது. "கரடி வித்தை" நடந்தது. கூட்டம் கலையத்துவங்கியது. வித்தை முடிந்த பின் சில திராட்சைகளை விழுங்கியது கரடி. ஒவ்வொரு பழத்திற்கும் அதன் கண்ணில் தெரிந்த ஏக்கமும் சிறிய உற்சாகமும் நாமும் ஏதாவது அதற்குத் தர வேண்டும் என்று தூண்டியது. அதை கட்டித் தழுவியபடி ஏதேனும் உண்ணக் கொடுப்பது போல கற்பனை செய்து கொண்டேன்.

கரடியை தொட்டுப் பார்க்க பத்து காசு என்று அப்பகுதியில் வசித்த அனைவருமே அறிவோம். என் சட்டைப் பையை தடவிப் பார்த்தேன். ஒரே ஒரு பத்து காசின் தடயம் மட்டுமே வடிவமாக தட்டுப்பட்டது. கரடியை தொட்டுப் பார்ப்பதா ஏதேனும் வாங்கித் தருவதா? சிறிய விஷயங்கள் பெரும் சிக்கலாய் தோன்றுவது தானே வயது? யோசனைக்குப் பின் அருகில் இருந்த ஐஸ் வண்டியில் பால் ஐஸ் ஒன்றை பத்து பைசாவுக்கு வாங்கி கரடியை நோக்கிச் சென்றேன். கரடியை நோக்கி குச்சி ஐஸை நீட்டியபோது "கரடி ஐஸ் எல்லாம் சாப்புடாதுடா" என்று பலமாக சிரித்தபடி தனக்கு வாங்கிக் கொண்டார் வித்தைக்காரர். ஏமாற்றத்துடன் இருந்த என்னிடம் "தொட்டுப் பாக்கறியா" என்றவுடன் வித்தைக்காரர் வேகமாய் பால் ஐஸை சாப்பிட்டு விடக்கூடாதே என்று வேண்டியபடி கரடியை சுற்றி சுற்றி வந்து தொட்டு மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி என்னை கரடியுடன் மேலும் இழுத்துச் சென்றது. வடக்குமாசி வீதி பிள்ளையார் கோவில் முன் அடுத்த வித்தை. இப்போது அவ்வப்போது கரடியை தொட்டுப்பார்க்கும் வாய்ப்பு...

அங்கிருந்து சக்தி சிவம் தியேட்டர் வழியே சிம்மக்கல் கடந்து கல்பாலம் வரை கரடி என்னை தன் வசீகரத்தால் என்னை கடத்தியது. வைகையில் ஆங்காங்கே தண்ணீர் தென்பட்டது. ஒரு வரிசைக் கல்லில் கரடியை கட்டியவர் அருகில் அமர்ந்து ஒரு பீடியை பற்ற வைத்தார். கரடி ஆற்றில் குதித்து விடுமோ என்று பயமாக இருந்தது. மெதுவாக தன் டிரான்ஸிஸ்டரை திருகித் தட்டினார். சில திசைகளில் கரகரவென்றும் சில திசைகளில் தெளிவாகவும் அவ்வப்போது ஏற்ற இறக்கமான சத்தங்களுடன் பாடித் துவங்கியது அந்தச் சிறிய வெள்ளைப் பெட்டி.





அன்றைய வருடங்களில், இலங்கை வானொலியின் ஞாயிறு தரவரிசை பட்டியலில் இளையநிலா தவறாமல் இருக்கும் என்று அனேகமாக அனைத்துத் தமிழர்களும் அறிந்திருப்பார்கள். அதை மயில்வாகனம் சர்வானந்தா போன்றோர் அறிவிக்கும் தொனியையும் மறந்திருக்க மாட்டார்கள். கரடி வித்தைக்காரருக்கும் அது தெரியுமா, வைகை நதியோரம் அமர்ந்து அப்பாடலை கேட்பது அவர் பழக்கமா, அல்லது அதற்காகவே திட்டமிட்டு அவரின் ஞாயிறு மாலையை கல்பாலத்தில் முடிப்பாரா? கரடியை வைத்து வித்தை காட்டுபவருக்கும் இளையநிலாவுக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு விசை எது? கல்பாலத்திலிருந்து கரடியை கூட்டிக் கொண்டு எங்கு போவார்? பாடலை முணுமுணுத்தபடி போவாரா?
இவை எதற்குமே என்னிடம் பதில் இல்லை. ஆனால் அன்று அந்த பாதி ரிப்பேரான டிரான்ஸிஸ்டரிலிருந்து இளையநிலா பாடத்துவங்கிய போது அவரின் விரல்கள் ஜோல்னா பையில் தாளம் போடுவதை நான் பார்த்தேன். அலையும் முகிலினங்கள் போல் இலக்கற்ற வாழ்க்கை ஆயிற்றே என்று முன்னேற்றத்தின் முகவரிகள் தொலைத்த துன்ப மழையை தனக்குள்ளே தேக்கிய கனத்த மேகமாய் அவர் இந்தப் பாடலை கேட்டிருக்கக் கூடும்...யார் கண்டது? இளையராஜாவை இன்னார்தான் ரசிக்க முடியும் என்று விதியேனும் இருக்கிறதா என்ன?

வைகையின் நீண்ட மணல்வெளியின் தொடுவானில் சூரியன் இறங்குவதை பார்த்தபடி இருந்த எனக்கு வீட்டை விட்டு வெகுதூரம் வந்து விட்டதன் கிலி தொற்றியது...சுமார் மூன்று மணி நேரம் என்னைக் காணாமல் இந்நேரம் எங்கெல்லாம் தேடத்துவங்கினரோ...ஓட்டமும் நடையுமாய் வீட்டை நோக்கி விரைந்தேன். அதன் பின் நடந்தவை பாடல் கேட்ட கதையின் பரப்பளவிற்கு தொடர்பில்லாதவை!